Thursday 20 October 2011

அம்மாவின் அக்கறை


அம்மாவின் அக்கறை ;

       ''அம்மா !இன்னிக்கு ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் நடந்துச்சு ;நான்தான் முதல் !''

உற்சாகம் கொப்பளித்தது ராகுலின் குரலில் .

''அப்புறம் ...''சட்டென இடைமறித்தாள் பார்கவி .''ராகுல் !முதல்ல கை ,கால் ,முகம் கழுவீட்டு வா !பால் குடிச்சிட்டு ட்யு சனுக்கு கிளம்பற வழியப் பார் ..''
கண்டிப்பான குரலில் கூறிவிட்டு இரவு சமையலை கவனிக்க சென்றாள்பார்கவி 

ஏழு மணி .'ஆனந்தமாய் 'சீரியலில் மூழ்கியிருந்தாள்.அப்போது தான் ட்யூசன்முடிந்து வீடு திரும்பியிருந்தான் ராகுல் .

''அம்மா !இன்னிக்கு நான் புதுசா ஒரு டிராயிங் போட்டேன் .எங்க மிஸ்சும்,பிரெண்ட்சும் சூப்பரா இருக்குன்னு சொன்னாங்க .நீயும் பாரும்மா 
அவன் ஆசையாய் நீட்டியதைக் கையில் வாங்காமல் ,''அப்படி வெச்சுட்டு போ !அப்புறம் பாக்கறேன் ''என்றாள் டி .வி .யிலிருந்து கண்களை எடுக்காமல் .

ராகுல் ஏமாற்றத்துடன் அங்கிருந்து நகர்ந்தான் .சிறிது நேரம் கழித்து ''அம்மா ,பசிக்குது ;சாதம் போடும்மா ..''என்று அவள் முன் வந்து நின்றான் .

''டேபிள் மேல தான் எல்லாத்தையும் எடுத்து வச்சுருக்கேன்ல.நீயே போட்டு சாப்பிட்டுக்கோ'' என்றாள் எரிச்சலுடன் .

''எனக்கு ரெண்டு அப்பளம் பொரிச்சு தாம்மா ,ப்ளீஸ்!''

''ஊறுகாய் தொட்டு சாப்பிடுடா .ரொம்ப முக்கியமான ஸீன்! என்னை நிம்மதியாய் சீரியல் பாக்க விட்டுத் தொலை ..''அதட்டல் போட்டு அவனை நகர்த்தினாள்.

எட்டு மணிக்கு வேறு சேனல் மாற்றி பார்க்கத் தொடங்கினாள்.கன்னத்தில் கை வைத்தபடி சுவாரஸ்யமாக 'அஞ்சலியில் ஆழ்ந்திருந்தவளின் தோள்தொட்டு உசுப்பினான் ராகுல் .

''ச்சே !உன்னோட ஒரே தொல்லையாப் போச்சு !''சீறினாள் பார்கவி .

''உனக்கு ஏற்கனவே அல்சர் இருக்கு .நீ கரெக்ட் டைமுக்கு சாப்பிடணும்னு
டாக்டர் சொல்லியிருக்கார்ல ....அப்பா வேற ஊர்ல இல்ல .நான்தானே உன்னை அக்கறையாப் பார்த்துக்கணும் .சாப்பாடு போட்டு எடுத்திட்டு வந்திருக்கேன் .சாப்பிடும்மா.....''என்றவாறு தட்டை நீட்டினான் ஒன்பது வயது 
ராகுல் .

கண்களில் நீர் மல்க மகனை வாரி அணைத்துக் கொண்டாள் பார்கவி . 

     [5.8.2007] கல்கி இதழில் வெளி வந்த என் சிறுகதை 






No comments:

Post a Comment