Monday 10 October 2011

அதற்க்கென்று ஒரு இடம்


அதற்கென்று ஒரு இடம்

- ரவிஷ்னா
'டாக்டர் ராகவ் எம் .எஸ்.,ஆர்த்தோ ' என்று பளபளத்த பெயர்ப் பலகையை சற்றே வெறுப்புடன் நோக்கினார் பெரியவர் சபேசன் .

ராகவ் அவரது எதிர் பிளாட்டிற்கு புதிதாய் குடி வந்திருக்கும் இளம் டாக்டர்.

அன்று மாலை அவனது வீட்டிற்கு சென்ற சபேசன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். சிறிது நேரம் பொதுவாய் பேசிக் கொண்டிருந்து விட்டு, "எனக்கு மூட்டு வலி பாடாப்படுத்துது" என்றார்.
"கிளினிக் வாங்க...பாத்துரலாம்.. இப்ப அங்க தான் கிளம்பிட்டிருக்கேன.. இதோ என் விசிட்டிங் கார்ட்" என்று நீட்டினான் ராகவ்.

சுருக்கென்றது சபேனுக்கு. 'டாக்டர் என்ற ஹோதாவைக் காண்பிக்கிறானா?ஆஸ்பத்திரிக்கு வர சொன்னால்தானே ப்ளட் டெஸ்ட், ஸ்கேன்,  எக்ஸ்ரே என்று சொல்லி ஆயிரம், இரண்டாயிரம் என்று பிடுங்கலாம்.. இள ரத்தத்தின் திமிர்..' மனதிற்குள் பொருமினார் .

கிளினிக் அடுத்த தெருவில் இருந்தது. அங்கே வந்து காத்து கிடந்து, ஒன்றரை மணி நேரம் கழித்து உள்ளே அழைக்கப்பட்டார் சபேசன்.

அவரை பொறுமையாய் பரிசோதித்த ராகவ், "இந்த மாத்திரையை தினம் ராத்திரி ஒண்ணு போடுங்க.. இந்த ஜெல்லை மூட்டுகள்ல தடவுங்க.. ஒரு அரைமணி நேரம் தினமும் வாக் போங்க... அப்புறம் கையை, காலை நீட்டி சில பயிற்சிகள்.. அதை எப்படி பண்ணனும்னு அடுத்த ரூம்ல இருக்க என் உதவியாளர் சொல்லித் தருவார்.. பதினஞ்சு நாள் கழிச்சு மறுபடி வாங்க" என்றான்.

"தேங்க்ஸ் சார்.. பீஸ் எவ்வளவு?" என்றவரை புன்முறுவலோடு ஏறிட்டான் ராகவ்.

"க்ளினிக்ல தான் டாக்டர்கிட்ட பேஷன்ட் ஒளிவு மறைவில்லாம தன் உடல் சம்பந்தமான பிரச்னைகளை சொல்லலாம்; காட்டலாம்.. இங்க உங்களை 'கவுச்'ல படுக்க வெச்சு டெஸ்ட் பண்ணினேன்.. என் வீட்டுல இப்படி முடியுமா.? அப்புறம் பக்கத்துக்கு வீட்டுக்காரங்க கிட்ட நான் பீஸ் வாங்கறதில்லை...''

ராகவ் சொல்ல சொல்ல வெட்கிப் போனார் சபேசன்.
(என்னுடைய கதை யூத்புல் விகடனில் வந்தது. )

No comments:

Post a Comment